Tuesday, November 24, 2009

கால்புள்ளி

நீ இன்னமும்
சிரித்துக்கொண்டுதானிருக்கிறாய்
தினம் முன்னூருமுறை
பேசிக்கொள்கிறோம்
நாளுக்கொரு
கவிதையெழுதுகிறேன் நான்
குழந்தையென கொஞ்சுகிறேன்
உன்னை
கோபங்கொண்டும் சண்டையிட்டும்
மௌனங்கொண்டும்
விளையாடுகின்றோம்
தீராத புன்சிரிப்பும்
உன் நினைவில் ஊரிய கனமும்
அழற்சியில் நீகொடுக்கும்
புதுமையும்
இன்பமான இரவில்
ஓர் நெடுங்கனவென
தொடர்கையில்
என்னருகில்
நீயிருப்பதும் இல்லையென்பதும்
தேவையற்ற கேள்விக்குறி..

Tuesday, November 10, 2009

மீதம்

பேசிமுடிந்ததும் எஞ்சியிருந்தவை
மின்னஞ்சலில் வந்துசேர்ந்தவை
குறுந்தகவலில் குவிந்தவை
சிரித்தபொழுதும்
அழுதபொழுதும்
நீயறியாமல் திருடுபோனவை
அங்கிங்கென
உன்னைவிட அதிகமாய்
உன்னை சேமித்துவைத்திருக்கிறேன்
என்றேனும்
நீ காணாமல் போனால்
சொல்லியனுப்பு
அத்தனையும் கொடுத்துவிடுகிறேன்
எனக்குபோக
மீதத்தை..

Thursday, October 29, 2009

நித்திரை

சிறகுகளில் முகம்புதைத்து
உறங்கும் ஒரு பறவையைபோல்
உன் போர்வைக்குள்
சுருண்டுகிடந்தாய்
அருகில் வந்தமர்ந்து,
தூங்கும் பூனையை
சீண்டும் குழந்தையாய்
திறந்திருக்கும் ஜன்னல்வழி
வீசும் காற்று தீண்டியது
சட்டென்று வலதுகரம்நீட்டி
சோம்பல் முறித்து
கால்களை உடலோடுஇறுகி
போர்வையை அழுத்தமாய் பற்றி
மீண்டும் புதைந்துக்கொண்டாய்
சிறிதுநேரம் கழித்து
புரண்டுபடுக்கையில்
கடவுள்களுக்கு மட்டுமே
புரியும் மொழியில் ஏதோ
உளறினாய்
அதில் என் பெயர் ஒலித்தது
மெல்ல மெல்ல
என்னுலகம் விடிய
இன்னமும் விடியாத உன்னுலகில்
மொத்தமாய் உறங்கிக்கொண்டிருந்தாய்
எனக்கும் சேர்த்து..

Tuesday, October 06, 2009

பதிவு

எழுதியிருக்கிறேன்
உனக்காகத்தான்
உன்னைப்பற்றிதான்
என்று நானும்
படித்துவிட்டேன்
தெரியும்
புரிகிறது
என்று நீயும்
பேசிக்கொள்ளாதவரை
எழுதிக்கொண்டுதான் இருப்பேன்
நானும்
படித்துக்கொண்டுதான் இருப்பாய்
நீயும்..

Thursday, October 01, 2009

தூரம்

சட்டென்று உன் நினைவு வந்தால்
கண்களை இறுகமூடி
உள்ளுக்குள் உனை தேடுவேன்
நீ சிரித்ததுபோலிருக்கும்
கைக்கடக்கமான ஒரு புகைபடம்
என் தலையனைக்கடியில்
இன்னொரு ஆறுதல்
காலையில் நீயனுப்பிய
குறுந்தகவலை நூறுமுறையேனும்
படித்திருப்பேன்
மாலைக்குள்ளாக
வழிநெடுக தென்படும்
பூக்களையும்
சிரிக்கும் குழந்தைகளையும்
கண்டு
நீ அருகிலிருப்பதாய்
புன்னகைப்பேன்
உறக்கம்வராத நள்ளிரவில்
கைபேசியை
அழுத்தமாய் பற்றிக்கொண்டு
இதயத்தின்மீது கிடத்தி தூங்குவேன்
இருப்பினும் சாலையில்
கைகோர்த்துச் செல்லும்
காதலர்களை கண்டுவிட்டால்
அத்தனையும் மீறி உதிர்ந்துவிடும்
ஒரு துளி கண்ணீரும்
பின்னொரு
இதழோர புன்னகையும்

Friday, September 11, 2009

சேர்க்கை

காலையில்
நேரம் கழித்தே கண்விழிக்கிறாய்
பல்துலக்கிவிட சொல்கிறாய்
குளிப்பாட்டிவிட சொல்கிறாய்
சிற்றுண்டியை பாதி உண்டபின்
மீதியை சின்னாபின்னமாக்குகிறாய்
இரண்டு ஜடை வேண்டுமென்கிறாய்
அடிக்கடி என் கைகளைப்பற்றி
ஆழமாய் கடிக்கிறாய்
தோட்டதில்
பட்டாம்பூச்சி பிடிப்பதாய்
மண்ணில் புரள்கிறாய்
சீக்கிரம் உறங்கிவிடுகிறாய்
உறங்குமுன் எதேனும்
கதைசொல்லச் சொல்கிறாய்
உன் வயதில்
இருபதை கழித்துவிட்டு
நான்கு என்கிறாய்
இனியும் உன்னை
பழகவிடுவதில்லை
பக்கத்துவீட்டுச் சிறுமியோடு